தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில், பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதால் சுகாதாரத்துறை சார்பில் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் நிருபர்களிடம் பேசிய சுகாதார செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ‘’வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. சுகாதாரத்துறை நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் பொது மக்களும் விழிப்போடு இருக்க வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் வரும் நடமாடும் மருத்துவ குழுவிடம் சென்று உடல் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்” என்றார்.