தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

765
Spread the love
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை.. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம் மற்றும் பெரம்பலூரில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும். இதேபோல் திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் கிருஷ்ணகிரி, நாகை பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், மயிலாடுதுறை, புதுச்சேரியில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19-ந் தேதி (நாளை) மத்திய வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும்.
 
இதனால் அந்தமான் கடல் பகுதியில் இன்றும், மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் நாளையும், மத்திய மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் வட கடலோர பகுதிகளில் நாளை மறுதினமும், ஆந்திர கடலோர பகுதிகளில் 21-ந் தேதியும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

LEAVE A REPLY