Skip to content

அதிகக் கட்டணம்: 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 12 முதல் 18-ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி வெளியூர் செல்லும் பொதுமக்களிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, தமிழக போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய 45 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் தீவிரத் தணிக்கை நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி 13-ம் தேதி வரை மொத்தம் 3,337 ஆம்னி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த சோதனையின் போது, விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட பேருந்துகளுக்கு 547 சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

இணக்கக் கட்டணமாக ரூ.2,46,000 மற்றும் வரியாக ரூ.41,77,362 என மொத்தம் சுமார் 44 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எந்தவித சிரமமுமின்றித் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதை உறுதி செய்ய, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

error: Content is protected !!