சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர், சுற்றுலா பயணியாக தாய்லாந்துக்கு சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். ஆனால் அவர் வடமாநிலம் செல்லாமல் சென்னைக்கு வந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த வாலிபரின் சூட்கேசை பரிசோதித்தனர். அதில் சாக்லெட்டுகள், பதப்படுத்தப்பட்ட உணவு என காற்றுபுகாத 11 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் வைத்திருந்தார். அவைகளை பிரித்து பார்த்தபோது உயர் ரக, பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 11 பாக்கெட்டுகளில் இருந்த சுமார் 7.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அதே விமானத்தில் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய மற்றொரு வடமாநில வாலிபரின் சூட்கேசில் பச்சை நிற பூக்கள் இருந்த 6 பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தனர். அதில் 2 கிலோ எடை கொண்ட உயர் ரக கஞ்சா இருந்தது. அவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
2 பேரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.9.5 கோடி என கூறப்படுகிறது. விசாரணையில் தாய்லாந்து நாட்டில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தால் பணம் தருவதாக கூறியதால் பணத்துக்கு ஆசைப்பட்டு கடத்தி வந்ததாக சுங்க இலாகா அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து 2 வாலிபர்களையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த கஞ்சாவை யாரிடம் கொடுப்பதற்காக சென்னைக்கு கடத்தி வந்தனர்? உயர் ரக கஞ்சா கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என விசாரித்தனர்.
அப்போது இவர்களிடம் கஞ்சாவை வாங்கிச் செல்ல விமான நிலையத்துக்கு வெளியே ஒருவர் காத்திருப்பது தெரியவந்தது. உடனே சுங்க இலாகா அதிகாரிகள் கஞ்சாவை வாங்கிச் செல்ல காத்திருந்த வட மாநில வாலிபரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அந்த கஞ்சாவை ரயில் மூலம் வேறு மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. கைதான 3 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
