இமாசல பிரதேச மாநிலம் சிர்மாவுர் மாவட்டத்தில் நேரிட்ட பயங்கர பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியையும் அறிவித்துள்ளார்.
தலைநகர் சிம்லாவிலிருந்து குப்வி நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, நேற்று சிர்மாவுர் மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 500 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 14 ஆக அதிகரித்துள்ளது.
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து (PMNRF) உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விபத்து குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

