Skip to content

தஞ்சையில் களைகட்டும் ஹாட்பாக்ஸ் அரசியல்-அதிமுக துவங்கியது

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுகவினர் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். திமுக எப்படி கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறதோ, அதுபோல் இம்முறை அதிமுக டெல்டா மண்டலத்தில் சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக இயங்கி வருகிறது.

ஏனென்றால் தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 20 தொகுதிகளில் 17 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. அதிமுகவின் காமராஜ், ஓ.எஸ்.மணியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் மட்டுமே வென்றனர். இதில் வைத்திலிங்கமும் தற்போது திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். இதனால் டெல்டாவில் அதிமுக பலவீனமடைந்து வருவதாக பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்கள் தொடர்பாக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசி வந்தாலும், தன்னை விவசாயி என்று அடையாளப்படுத்தி கொண்டாலும், டெல்டா மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர். அண்மையில் பெய்த கனமழையின் போதும் கூட திமுகவினரே களத்தில் அதிகளவில் இருந்தனர்.

தற்போது தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் அமைச்சர்கள் பலரும் தங்களின் தொகுதிகளில் பரிசுப்பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர். ஏற்கனவே அமைச்சர் கே.என்.நேரு தனது தொகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கினார். அதே பாணியில் செந்தில் பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் கொடுத்தனர்.

சில நாட்களுக்கு முன் தஞ்சாவூரில் திமுக தரப்பில் ஹாட் பாக்ஸில் மட்டன் பிரியாணி வைத்து ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்கப்பட்டது. இதனை அதிமுக கையில் எடுத்துள்ளது. அதாவது அதிமுகவின் முதற்கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அண்மையில் வெளியிட்டிருந்தார். குல விளக்கு திட்டம், ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம், இருசக்கர வாகனம் வழங்க மானியம் உள்ளிட்டவற்றை அறிவித்தார்.

இந்த வாக்குறுதிகளை நோட்டீஸாக அச்சிட்ட அதிமுகவினர், ஒரு ஹாட் பாக்ஸுடன் சேர்த்து ஒவ்வொரு வீட்டிற்கும் விநியோகித்து வருகின்றனர். இதனால் தஞ்சாவூர் மாவட்ட மக்கள் பரிசு மழையில் திளைத்து வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவில் வேட்பாளர்கள் பட்டியல் உறுதியாகிவிட்ட சூழலில், அந்தந்த தொகுதிகளின் வேட்பாளர்களே இதற்கான செலவை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!