Skip to content

ஹோட்டல் உரிமையாளர் குத்திக் கொலை – கொலையாளி கைது

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நாகமநாயக்கன்பாளையம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தவர் திருப்பத்தூரைச் சேர்ந்த திலீபன். இவரது ஹோட்டலில் அதே ஊரைச் சேர்ந்த 37 வயதான அன்பு எஸ்தர் என்பவர் கடந்த மூன்று மாதங்களாகப் பணியாற்றி வந்தார். இதற்கிடையில், ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்துகொண்ட பிரேம் ஆனந்த் என்ற ஆட்டோ ஓட்டுநர், எஸ்தரை நான்காவதாகத் திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். ஆனால் எஸ்தர் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, ஹோட்டல் உரிமையாளர் திலீபனுடன் நெருக்கமாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. ​

இதனால் ஆத்திரமடைந்த பிரேம் ஆனந்த், கடந்த ஜனவரி மாதம் ஹோட்டலுக்குச் சென்று எஸ்தரையும் திலீபனையும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இது தொடர்பாக சூலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு 17 நாட்கள் சிறையில் இருந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். சிறையிலிருந்து வந்தும் ஆத்திரம் தணியாத பிரேம் ஆனந்த், இன்று அதிகாலை 5:30 மணியளவில் எஸ்தர் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். எஸ்தர் கதவைத் திறந்தபோது, அங்கு திலீபன் கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டு ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற பிரேம் ஆனந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திலீபனை சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார்.

​கொலை செய்ததோடு நில்லாமல், வீட்டின் சமையல் எரிவாயுவை திறந்துவிட்டு தீ வைத்து எரிக்கவும் அவர் முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வெடிப்பில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சிதறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பிரேம் ஆனந்தைப் பிடித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி டி.எஸ்.பி கரிகால் சங்கர் பாரி மற்றும் சூலூர் போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த திலீபனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த எஸ்தர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலையாளி பிரேம் ஆனந்தை கைது செய்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!