மதுரை அவனியாபுரம் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், சுயதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை. அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகன் சண்முகசுந்தர் (வயது 24). மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. படித்துள்ள இவர், சரஸ்வதி நாடார் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் பயின்றார். சிறுவயது முதலே கால்நடைகள், செல்லப்பிராணிகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர் காலப்போக்கில் அதனுடன் ஒன்ற தொடங்கினார்.
தற்போது சண்முகசுந்தர் சிவகங்கையில் செயல்பட்டு வரும் தனியார் சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி. படித்து வருகிறார். இளைஞர்கள் இப்போது டூவீலா், அல்லது கார், பஸ்களில் கல்லூரிக்கு செல்லும் நிலையில், சண்முகசுந்தர் குதிரையில் கல்லுாிக்கு செல்கிறார். இதற்காக ரூ.75 ஆயிரத்தில் குதிரை ஒன்றை வாங்கி உள்ளார். இதற்காக தினமும் குதிரைக்கு தீனி போட ரூ.400 வரை செலவு செய்கிறார். குதிரைகள் எப்போதும் மனிதர்களோடு நெருங்கிப்பழகும் சமூக விலங்காகும். அதன் மூலம் பல அனுபவங்கள் கிடைக்கின்றன. குதிரை சவாரி செய்தால் மன அழுத்தம் குறையும். மேலும் மன தைரியமும் அதிகரிக்கும். பண்டைய மன்னர்கள் பெரும்பாலும் குதிரைப்படையை வைத்திருக்க காரணமும் இதுவேதான். கால்நடை மருத்துவர்கள் மூலம் குதிரை பராமரிப்பு குறித்து அறிந்துகொண்டேன் என்கிறார் சண்முகசுந்தர். குதிரைக்கு தீனி போடுவது, குளிப்பாட்டுவது போன்ற வேலைகளையும் இவரே கவனித்து கொள்கிறார்.
நான் குதிரையில் செல்வதை தொடக்கத்தில் மக்கள் வேடிக்கையாக பார்த்தனர். இப்போது அப்படி யாரும் பார்ப்பதில்லை. அதே நேரத்தில் குதிரையில் ஏறிவிட்டால் மனதுக்கு ஒரு கெத்து, தைரியம் வருகிறது என்றார் சண்முகசுந்தர்