Skip to content

மீனவ கிராமங்கள் தரங்கம்பாடி கடைவீதியில் உண்ணாவிரத போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவ கிராமங்கள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் கிராமத்தினர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மீன்வளத்தை பாதிக்கும் வகையில் ஒரு சில கிராமங்கள் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி, அதிவேக குதிரை திறன் கொண்ட இன்ஜின்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை தடை செய்ய வேண்டும் என்று மாவட்ட தலைமை கிராமம் தரங்கம்பாடி தலைமையில் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். தீர்வு எட்டப்படாத நிலையில்
தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி, மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட இன்ஜின் ஆகியவற்றை பயன்படுத்தி சட்ட விரோதமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாராமுகம் காட்டும் அரசு மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து மாவட்ட தலைமை கிராமம் தரங்கம்பாடி தலைமையில் சின்னூர் பேட்டை, குட்டியாண்டியூர், மாணிக்கபங்கு பெருமாள்பேட்டை, வெள்ளகோயில், சின்ன மேடு, சின்னங்குடி, வானகிரி உள்ளிட்ட பெரும்பாலான மீனவ கிராமத்தினர் இன்று ஒரு நாள் தொழில் மறியல் செய்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தரங்கம்பாடி கடைவீதியில் டெண்ட் அமைத்து 600க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி பூம்புகார், சந்திரபாடி மீனவ கிராமத்தினர் சுருக்குமடி இரட்டை மடி அதிவேக குதிரைதிறன் கொண்ட இன்ஜினை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும், இதை தடுக்க வேண்டிய மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தென போக்கில் செயல்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மீன்வளத்துறை மாவட்ட உதவி இயக்குனர் மோகன் குமார், தரங்கம்பாடி வட்டாட்சியர் சதீஷ்குமார், சிறப்பு நிர்வாக நடுவர் ராகவன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!