திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா அமைக்க 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.ஆனால் இதுவரை பூங்காவை அமைக்காமல் காலம் தாழ்த்தும். மாநகராட்சியை கண்டித்து, சண்முகா நகர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று புத்தூர் நான்கு ரோட்டில் மாபெரும் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு சண்முகாநகர் நலச்சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி. முத்துமாரி தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது ;-
திருச்சி மாநகராட்சி சார்பில் 2023-ம் ஆண்டு உய்யகொண்டான் திருமலை சண்முகாநகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. பின் மக்கள் பயன்பாட்டிற்கான பூங்காவை அமைக்க பணிகள் தொடங்க முற்படும்போதெல்லாம் தனி நபர் ஒருவர் திட்டப் பணிகளை தொடங்கவிடாமல் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார்.
அவருக்கு இந்த மாநகராட்சி நிர்வாகம், அரசாங்கம் எப்படி துணை போகிறது?.
அரசு நிலத்தை அபகரிக்க துடிக்கும் தனி நபருக்கு இந்த மாநகராட்சி நிர்வாகம் துணை புரிகிறதா ?
இந்த பூங்காவுக்காக பலமுறை மாநகராட்சி மேயர், ஆணையர், உதவி ஆணையர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தோம்.
எங்கள் நியாயமான கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றாததால் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கேட்டோம். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இன்று போராட்டம் நடைபெறுகிறது. இந்த கோரிக்கை உடனடியாக நிறைவேற்றாவிட்டால், மீண்டும் பொதுமக்களை திரட்டி அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் .
இவ்வாறு சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி.முத்துமாரி பேசினார். இதில் சண்முகா நகர் நலச்சங்க தலைவர் எஸ். பி. வேலாயுதன், செயலாளர் பி.குமரன், பொருளாளர் என். செந்தில்குமார் ,
துணைத் தலைவர் ஆர்.சிவக்குமார் , இணை செயலாளர்கள் பொன்ராஜ் , எஸ் ஆதவன், ராஜா சிங்கம் மற்றும் சண்முகா நகர் நலச்சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தை ஒட்டி புத்தூர் நான்கு ரோட்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

