ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், துர்கா அக்ராஹாரத்தை சேர்ந்தவர் விஜய் (40). இவர் பவானிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (30). நுஜிவீடுவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளான். திருமணத்திற்கு பிறகு விஜய்க்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த ஒன்றரை வருடங்களாக கணவரை பிரிந்து சரஸ்வதி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
சரஸ்வதி வழக்கம்போல் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்று பின்னர் வேலை முடிந்து மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு திரும்புவது வழக்கம். மனைவி வேலைக்கு சென்று வீடு திரும்புவதை கடந்த சில நாட்களாக விஜய் கண்காணித்து வந்தார். நேற்று காலை 8 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வேலைக்குச் சென்ற சரஸ்வதி வேலை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வருவதை கண்ட விஜய் ஆவேசத்துடன் மனைவியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார். பின்னர் தன்னிடம் இருந்த கத்தியை’ எடுத்து சரஸ்வதியின் கழுத்தில் வெட்டினார். சரஸ்வதி தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்.
பொதுமக்கள் திரண்டு வந்து அவரை மீட்க முயன்றனர். விஜய் அப்போது மனைவியின் கழுத்தை அறுத்தார். சரஸ்வதியின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. தடுக்க முயன்ற பொதுமக்களை ரத்தம் சொட்டசொட்ட இருந்த கத்தியை காட்டி உங்களையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இதனால் உயிர் பயத்தில் பொதுமக்கள் யாரும் விஜய்யை நெருங்கவில்லை. சிறிது நேரத்தில் சரஸ்வதி உயிருக்கு போராடியபடி துடித்து பரிதாபமாக இறந்தார். சாகும் வரை விஜய் அங்கேயே நின்றார்.
அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து சூர்ய ராவ் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் விஜயை மடக்கி பிடித்தனர். சரஸ்வதியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். விஜயை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

