கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள துராப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். பெயிண்டர். இரவது மனைவி பிரியா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பிரியாவின் நடத்தையில் சிலம்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்படும். இதனால் பிரியா அடிக்கடி பெரியபாளையம் அடுத்த ஆரணி அருகே உள்ள புதுப்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு செல்வதும் பின்னர் சமாதானம் அடைந்து கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தியும் வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதமாக பிரியா தனது பெற்றோருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தார். இதற்கிடையே 2 நாட்களுக்கு முன்பு பிரியாவின் தந்தை சீனிவாசன் மகளை பார்ப்பதற்காக துராப் பள்ளம் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது மகள் அங்கு இல்லை. இதுபற்றி மருமகன் சிலம்பரசனிடம் கேட்ட போது பிரியா வெளியில் சென்று விட்டதாக கூறி சமாளித்தார். மேலும் பேரன்களும் தனது தாய் கடந்த 2 மாதமாக வீட்டில் இல்லை என்று தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த சீனிவாசன் தனது மகள் பிரியா மாயமானது குறித்து ஆரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிலம்பரசனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி இரவு மனைவி பிரியாவுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கழுத்தை நெரித்து கொன்று விட்டதாக தெரிவித்தார்.
மேலும் உடலை டிரம்மில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஏழு கண் பாலத்தை ஒட்டிய சுடுகாட்டின் அருகே புதைத்து விட்டதாக கூறினார். இதையடுத்து சிலம்பரசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு பிரியா கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெற்றோர் வீடான புதுப்பாளையத்திற்கு வந்தார். அங்கு பெற்றோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதன் பின்னர் நடத்தை சந்தேகத்தில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் சிலம்பரசன் தனது மனைவி பிரியாவை கழுத்தை நெரித்து கொன்று உடலை சுடுகாடு அருகே புதைத்து இருப்பது தெரியவந்தது. கடந்த 2 மாதமாக சிலம்பரசன் எதுவும் தெரியாதது போல் சகஜமாக இருந்து உள்ளார்.
அவர் ஒருவரால் உடலை கொண்டு சென்று புதைத்து இருக்க முடியுமா? என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. பிரியா உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இன்று (செவ்வாய்) கும்மிடிப்பூண்டி தாசில்தார் முன்னிலையில் ஆரம்பாக்கம் போலீசார் உடலை தோண்டி எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.