கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம் ; சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க்க உள்ளது
சர்வதேச அளவில் புகழ் பெற்ற 41-வது ‘ஷெல் ஈக்கோ-மேரத்தான்’ ஆசிய-பசிபிக் போட்டிகள், கத்தார் நாட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. மிக குறைந்த எரிபொருளில் அதிக ஆற்றலுடன் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்கும் மாணவர்களுக்கான சர்வதேச போட்டி இது. மேலும் வாகனத்துறையில் வழக்கமான எரிபொருள் அல்லாது நிலைத்தன்மை கொண்ட எரிபொருள் மூலம் அதிக நேரம் திறம்பட இயங்கும் வாகனங்களை உருவாக்கும் போட்டியாகும்.
இந்த போட்டியில், கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களை சேர்ந்த 14 மாணவர்களை கொண்ட அணியான ‘டீம் ரிநியூ’, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் தங்களின் புதிய முன்மாதிரி

வாகனத்தை உருவாக்கியுள்ளனர். இந்த அணியே இப்போட்டியின் ஹைட்ரஜன் எரிபொருள் பிரிவில் இந்தியா சார்பாகப் பங்கேற்கும் ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
இவர்களின் அறிமுகமும், இந்த வாகனத்தின் அறிமுக நிகழ்வு குமரகுரு கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் நடைபெற்றது. ப்ரோபெல் இ.வி. நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் குறிச்சி குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர் இந்த வாகனத்தை அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த ஷெல் ஈக்கோ-மேரத்தானில் டீம் ரிநியூ பங்கேற்கிறது. இந்த ஆண்டு ஜனவரி 21 முதல் 25 வரை கத்தார் நாட்டின் தோஹாவில் உள்ள லுசைல் சர்வதேச சர்க்யூட்டில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இந்த அணியில் குமரகுரு கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள் உள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் துறையைச் சேர்ந்தவர்கள். திரு. அஸ்வின் கார்த்திக் இந்த அணியின் கேப்டனாகவும், செல்வி. ஷோபிகா வாகனத்தின் ஓட்டுநராகவும் செயல்படுகின்றனர்.
இந்த ஹைட்ரஜன் எரிபொருள் பிரிவு என்பது குறைந்த எரிபொருளில் அதிக மைலேஜ் பெறுவதை அடிப்படையாகக் கொண்டது. இதற்காக மாணவர்கள் இந்த வாகனத்தை ஆரம்பம் முதல் முழுமையாகத் தாங்களே வடிவமைத்துள்ளனர். வாகனத்தின் ஏரோடைனமிக்ஸ் திறனுக்காக, மீன்கொத்தி பறவையின் அலகு போன்ற வடிவம் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனத்தின் எடையைக் குறைத்து வலிமையை அதிகரிக்க ‘பசால்ட் ஃபைபர் – பிவிசி ஃபோம்’ கலவைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வாகனத்தின் மொத்த எடை 45 கிலோ ஆகும். இது 2024-ல் உருவாக்கப்பட்ட ரிநியூ 1.0 வாகனத்தை விட 21 கிலோ குறைவாகும். இந்த பசால்ட் ஃபைபர் தொழில்நுட்பம் கார்பன்-ஃபைபர் போன்ற வலிமையைத் தருவதோடு குறைந்த எடையும் கொண்டது.
வாகனத்தின் மோட்டார் மற்றும் எரிபொருள் கலனைத் தவிர, மற்ற அனைத்து பாகங்களையும் மாணவர்கள் கல்லூரியிலேயே 10 மாத உழைப்பில் தயாரித்துள்ளனர். ஒரு கன மீட்டர் ஹைட்ரஜனைப் பயன்படுத்தி 600 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும் வகையில் இதன் ஆற்றல் திறன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு மொத்தம் ரூ.42 லட்சம் செலவாகியுள்ளது. இந்தத் தொகையை குமரகுரு கல்வி நிறுவனத்துடன் இணைந்து ப்ரோபெல், திரிவேணி, கோஸ்ட், ஜே.ஏ மோட்டார்ஸ்போர்ட் மற்றும் ஹொரைசன் ஆகிய நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்துள்ளன.
நிகழ்வில் குறிச்சி குமார் பேசுகையில், மாணவர்களின் கடின உழைப்பையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைத் தேர்ந்தெடுத்த விதத்தையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். மாணவர்கள் இந்தப் போட்டியில் கற்றுக் கொண்ட பொறியியல் நுணுக்கங்களைத் தங்களின் எதிர்காலப் பணியிலும் தொடர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
திரு. சங்கர் வாணவராயர் பேசுகையில், டீம் ரிநீயூ , இந்தப் பிரிவில் வெற்றி பெறும் முதல் இந்திய அணியாகத் திகழ வேண்டும் என வாழ்த்தினார். கோயம்புத்தூர் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவே உங்கள் வெற்றிக்காகக் காத்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், கத்தார் நாட்டுக்குச் செல்லும்போது சர்வதேச அளவில் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், அங்கிருப்பவர்களிடம் இருந்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும் மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

