அ.தி.மு.க.வில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன், நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தாக வெளியான தகவல் தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக வெடித்திருந்தது. இந்த செய்தி உண்மையான தகவலா இல்லையா என குழப்பங்கள் எழுந்த நிலையில், செங்கோட்டையன் தற்போது அதனை மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் தனது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே சென்றிருந்ததாகவும், எந்த அரசியல் சந்திப்பும் நடைபெறவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். கோபிசெட்டிப்பாளையத்திற்கு திரும்பிய செங்கோட்டையன், செய்தியாளர்களிடம், “சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை. மனைவியின் சிகிச்சைக்காகச் சென்று, சொந்த வேலைகளை முடித்துவிட்டுத் திரும்பினேன். தற்போதைய சூழலில் சந்திப்புகளுக்கு வாய்ப்பில்லை,” என்று கூறினார்.
அரசியல் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் யாருடனும் பேசவில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார்.ஒருங்கிணைப்பு பணிகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “யார் என்னுடன் பேசினார்கள் என்பது ரகசியம். பல நண்பர்கள் என்னுடன் உரையாடுகின்றனர். அவர்களிடம் ஒருமித்த கருத்துகள் உள்ளன,” என்று பதிலளித்தார்.
இப்போதுள்ள சூழலில் யாரையும் நான் சந்திக்க வாய்ப்பில்லை. அரசியல் ரீதியாக சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை. நல்லதே நடக்கும் என நம்புவோம் அதிமுக வலிமை பெற வேண்டும் எனவும், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே என் நோக்கம் என்றும் 100 ஆண்டுகள் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற அம்மாவின் (ஜெயலலிதா) கனவு நிறைவேற வேண்டும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.