டெல்லி நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி வீட்டில் இல்லை. விபத்து குறித்து வர்மா குடும்பத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் நீதிபதியின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடித்தனர். எவ்வளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை
இந்தச் சம்பவம் தொடர்பாக உள் விசாரணையைத் தொடங்கிய நீதிபதி உபாத்யாய் பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவாகரம் தொடர்பான விசாரணையில் தான் சேகரித்த தகவல்கள் ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். மார்ச் 20-ம் தேதி நடந்த உச்ச நீதிமன்ற கொலீஜிய கூட்டத்துக்கு முன்பாகவே விசாரணையைத் தொடங்கியிருந்தார். உச்ச நீதிமன்ற கொலீஜியம் நீதிபதி உபாத்யாயின் அறிக்கையை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கான முடிவினை எடுக்கும்.
இதனிடையே நீதிபதி வர்மா விடுப்பு எடுத்தார். அவர் விற்பனை வரி, ஜிஎஸ்டி, நிறுவன விவகாரங்களை விசாரணை செய்யும் ஒரு அமர்வுக்கு தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி பதவி விலகுவார், அல்லது கொலிஜியம் அவரை நீக்கம் என அனைவரும் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் வரும் 21ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை( இம்பீச்மெண்ட்) பாஜக கொண்டு வந்து, நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் என தெரிகிறது. இது குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல் தெரிவித்து உள்ளார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் நீதித்துறையில் உள்ள ஊழல் தொடர்பான விஷயம். எந்த ஒரு அரசியலுக்கும் இடமில்லைநாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க விரும்புகிறோம், இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்து முடிவெடுக்க பார்லிமென்ட் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.