பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக திட்டமிட்டு இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது. பதில் தாக்குதலும் ஒருபுறம் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
நமது நாட்டின் பொது போக்குவரத்து சேவையில் மிக முக்கிய பங்கு வகிப்பது ரயில் போக்குவரத்து, நாள்தோறும் லட்சக் கணக்கான பயணிகள் ரயில்
சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள், பேசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கோவை ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றன. தெற்கு ரயில்வேயின் முக்கிய வருவாய் கேந்திரமாக கோவை ரயில் நிலையம் உள்ளது.
கோவை மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள ரயில் நிலையங்கள் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கோவை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் ரயில்வே காவல் துறையினர் தீவிர சோதனைக்கு பின்னரே, ரயில் நிலையத்திற்குள் அனுமதி அளித்து வருகின்றனர். மேலும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பயணிகளை தீவிர கண்காணித்து பணியிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
