Skip to content

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

  • by Authour

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய குயிண்டன் டி காக் சதம் விளாசி அசத்தினார். அவர் 89 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் டெம்பா பவுமா 48 ரன்களும், டெவால்ட் பிரேவிஸ் 29 ரன்களும் எடுத்தனர். மேத்யூ ப்ரீட்ஸ்க் 24 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 73 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இதனையடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்தனர். தொடக்கம் முதலே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 121 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் இந்திய அணி 39.5 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகனாகவும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

error: Content is protected !!