இந்திய கடலோர காவல்படை (ICG) தனது 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கிழக்கு மண்டல தலைமையகம் சார்பில் பிரம்மாண்டமான 1,500 கி.மீ. மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தியது. 50 வீரர்கள் பங்கேற்ற இந்தப் பயணம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் தேசப்பற்றை முன்னிலைப்படுத்தும் விதமாகத் திட்டமிடப்பட்டது.
இந்த மோட்டார் சைக்கிள் பேரணி தூத்துக்குடி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இரு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் இரு குழுக்களாகத் தொடங்கியது. விசாகப்பட்டினத்தில் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜேஷ் மிட்டலும், தூத்துக்குடியில் சுங்கத்துறை ஆணையர் விகாஸ் நாயரும் பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஐந்து நாட்களில் காக்கிநாடா, காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட முக்கியக் கடலோரப் பகுதிகளைக் கடந்த இந்தப் பேரணிக்கு, சென்னையில் ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மீனவர்களிடையே ஏற்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது. பயணத்தின் இடையே மீனவர்களுடன் சமூகக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, இந்தியாவின் செழுமையான கடல்சார் பாரம்பரியம் மற்றும் கடலோரப் பாதுகாப்பில் கடலோர காவல்படையின் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
வீரர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய கிழக்கு மண்டலத் தளபதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.எஸ். சைனி அவர்களைக் கவுரவித்தார். இப்பயணத்தின்போது கடல்சார் பாதுகாப்புடன் மட்டுமின்றி, மரம் நடுதல், பெண் கல்வி, பெண்கள் பாதுகாப்பு மற்றும் ‘தூய்மை இந்தியா’ போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சமூக விழிப்புணர்வு செய்திகளும் பொதுமக்களிடையே கொண்டு செல்லப்பட்டன.

