இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அற்புதமாக ஆடி போட்டியை சமன் செய்தது. நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெறும் என்றே அனைவரும் எதிர்பாா்த்தனர். 4 விக்கெட்டுகள் கையில் உள்ளது. 35 ரன்கள் மட்டுமே தேவை. எனவே எல்லோரும் இங்கிலாந்து வெற்றியை பார்க்கத்தான் திரண்டிருந்தனர். வெற்றியை கொண்டாட இங்கிலாந்து ரசிகர்கள் மைதானத்தில் நிரம்பி இருந்தனர். வழக்கமாக திங்கட்கிழமையில் டெஸ்ட் மைதானத்தில் இவ்வளவு கூட்டம் இருக்காது. இங்கிலாந்து வெற்றியை கொண்டாட வேண்டும் என்றே வந்த கூட்டம் தான் அது.
ஆனால் நிலை குலையா மனதுடன் இந்திய பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசினர். சிராஜ், பிரசித் கிருஷ்ணாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த வெற்றிக்கு அவர்களே சொந்தக்காரர்கள். முழு உரிமையும் அவர்களுக்கே சாரும். 6ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறித்துக்கொண்டனர்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற கில் முதன் முதலாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். புதிய அணி வருவதை கண்டு இங்கிலாந்து வீரர்கள், முன்னாள் வீரர்கள் எள்ளி நகையாடினர். ஆசஷ் தொடருக்கு நாம் பயிற்சி எடுப்பதற்காக இந்திய அணி வருகிறது என்றனர். சிலர், தோற்கவேண்டும் என்பதற்காகவே வருகிறார்கள் என்றனர்.
இந்திய முன்னாள் வீரர்கள் கூட சிலர் கில்லின் தலைமை மீது சந்தேக கண்ணோடு தான் பார்த்தனர். கோலி இருந்திருந்தால் இப்படி ஆகி இருக்குமா, ரோகித் இருந்தால் இப்படி ஆகி இருக்குமா? என்றெல்லாம் அவ்வப்போது விமர்சனங்கள் வந்தன. எல்லா விமர்சனங்களுக்கும் நேற்று பதில் கொடுத்து விட்டது கில் அண்ட் கோ.
இங்கிலாந்து அணியின் இக்கட்டான நிலையில் வலது கையில் கட்டு போட்டு, ஒற்றை கையில் பேட்டை தூக்கிக்கொண்டு வந்த இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ்சையும் பாராட்டத்தான் வேண்டும்.
இங்கிலாந்து தொடரை சமன் செய்ததன் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கில் ஒரு சிறந்த கேப்டன் என்பதையும் நிரூபித்து விட்டார். இந்த வெற்றி குறித்து கேப்டன் கில் கூறியதாவது:
சிராஜ் ஒவ்வொரு பந்திலும் தன்னால் முடிந்ததை கொடுத்தார். அவரை போன்ற வீரரை ஒவ்வொரு கேப்டனும் விரும்புவார்கள். அவர் எங்கள் அணியின் அதிர்ஷ்டம். தொடர் முழுவதும் இரு அணிகளும் நன்றாகவே ஆடின. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நாங்கள் கற்றுக்கொண்டது, எப்போதும் நம்பிக்கையை விட்டு விடக்கூடாது என்பது தான். 5 வது நாள் ஆட்டம் உண்மையிலேயே த்ரில்லாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற முகமது சிராஜ் கூறும்போது, இங்கிலாந்தை தொடர்ந்து நெருக்கடியிலேயே வைத்திருக்க வேண்டும் என நினைத்தேன். அதே நேரத்தில் என் பந்து வீச்சை நம்பினேன். அதன்படியே செய்தேன் நல்ல பலன் கிடைத்தது’ என்றார். –
இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன் ஷிப் போட்டிக்கான புள்ளி பட்டியலில் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இங்கிலாந்து 4வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.
இந்த வெற்றி ககுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கூறியதாவது: “முகமது சிராஜ் கடைசி விக்கெட்டை வீழ்த்தியபோது, ஒரு பயிற்சியாளராக எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும், ஒரு கிரிக்கெட் வீரராக அவரது போராட்ட குணத்தையும், அந்தச் சூழலில் அவர் வெளிப்படுத்திய திறமையையும் கண்டு நான் வியந்து பாராட்டினேன்” என்று கூறினார். “நான் பார்த்ததிலேயே சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்!”
ஆறு வாரங்கள் நடைபெற்ற இந்தத் தொடரில் ஏற்ற இறக்கங்கள், சில நேரங்களில் ஆக்ரோஷம், சில நேரங்களில் நட்புணர்வு, சிறப்பான கிரிக்கெட் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். “இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே இது கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். இந்திய அணி எங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோதிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததை விட இரு அணிகளுக்குமே இது மிகப்பெரிய சோதனையாக அமைந்தது. இந்த அற்புதமான தொடரின் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சி” என்றும் மெக்கல்லம் தெரிவித்தார்.