இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள புரங்ரங் மலைப்பகுதியை ஒட்டிய பசிர் லங்கு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் அந்த கிராமத்தில் இருந்த 34 வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. இதில் வீடுகளில் இருந்த 97 பேர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், கடந்த இரண்டு நாட்களாகப் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
மண்ணுக்குள் புதைந்த நிலையில் மாயமான எஞ்சிய 72 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதால் அந்தப் பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.

