இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள இன்ஸ்டாகிராம் (Instagram) பயனர்கள் செயலியை பயன்படுத்துவதில் கடுமையான இடையூறுகளை எதிர்கொள்கிறார்கள். இன்ஸ்டா கணக்கிற்குள் நுழைவதற்கான லாக்-இன் முயற்சிகள் தோல்வி அடைவதாக பல கூறுகின்றனர். சர்வர் இணைப்புச் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் பயனர்கள் சொல்கிறார்கள்.
பிரபல சமூக வலைத்தளத்தில் ஏற்பட்டுள்ள இந்த தொழில்நுட்பக் குறைபாடு கோடிக்கணக்கான பயனர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்கள் செயலியை அணுக முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.முக்ககியமாக அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் இந்த பாதிப்பு அதிகமாகக் காணப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
வெவ்வேறு பகுதிகளில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளைக் கண்காணிக்கும் ‘டௌன்டெக்டர்’ தளத்தின்படி, அமெரிக்காவில் மட்டும் 10,700-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் சுமார் 252 பயனர்களும், பிரிட்டனில் 135 பயனர்களும் இந்தப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள பயனர்களில் 77 சதவீதம் பேர் செயலியை அணுகுவதில் சிக்கல் இருப்பதாகவும், மற்றவர்கள் இணையதளம் மற்றும் சர்வர் இணைப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சில பயனர்களுக்குப் பதிவுகளைப் பதிவிடுவதிலும், சிலருக்கு முகப்புப் பக்கத்தை புதுப்பிப்பதிலும் சிக்கல்கள் நீடித்து வருகின்றன.இருப்பினும், இந்தத் திடீர் முடக்கம் குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கம் எதையும் அளிக்கவில்லை.

