தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார்.
அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேர் ஆண்கள், 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பேர் பெண்கள், 7 ஆயிரத்து 617 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றாலும் 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக்கொள்ளலாம் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில், வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்த்துக்கொள்ளலாம்.
வாக்காளர் பதிவு அலுவலரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் 15 நாட்களுக்குள் மாவட்ட கலெக்டரிடம் மேல்முறையீடு செய்யலாம். முதல் மேல்முறையீட்டு தீர்ப்பில் அதிருப்தி அடைந்தால், மக்கள் பிரநிதித்துவச் சட்டப்படி மாவட்ட கலெக்டரின் உத்தரவு வழங்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தலைமை தேர்தல் அதிகாரியிடம் 2-வது மேல்முறையீடு தாக்கல் செய்யலாம்.
வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்து, தேவையானால் பெயர் சேர்க்க (படிவம் 6), திருத்தம் செய்ய (படிவம் 8) அல்லது நீக்கம் செய்ய (படிவம் 7) செய்வதற்கான விண்ணப்பங்களை இணையம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
18-19 வயதுக்குட்பட்ட முதல் முறையாக வாக்காளர்களாக பதிவு செய்தவர்களுக்கும், திருத்தங்களுக்கு விண்ணப்பித்த அல்லது தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்த, ஏற்கனவே உள்ள வாக்காளர்களுக்கும், அவர்களின் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பு முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
தொடர் திருத்தக் காலம், 23-2-2026 முதல் (அதாவது இன்று) நடைமுறையில் உள்ளது. 1-1-2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்த, ஆனால் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இல்லாத அனைத்து தகுதியுள்ள குடிமக்களும் விண்ணப்பிக்கலாம்.
அதாவது, வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். இணையம் மூலமாக https://voters.eci.gov.in/ என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Voter Helpline App செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை 1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 1800-4252-1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுடன் மாநிலத் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.

