அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேல் நாட்டு தூதரகம் உள்ளது. இங்கு பணியாற்றி வந்த ஊழியர்களான ஒரு ஆணும், பெண்ணும், அந்த பகுதியில் உள்ள மியூசியத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த இருவரையும் ஒரு மர்ம நபர் சுட்டுக்கொன்றான். கொல்லப்பட்ட இருவரும் காதலர்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தனர்.
சுட்டுக்கொன்றவன், அங்கிருந்து தப்பி ஓடவில்லை. பாலஸ்தீனத்துக்காக இதை செய்தேன். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும் என்று அவன் கத்தினான். 10 நிமிடம் கழித்து தான் அங்கு போலீஸ் வந்தது. அதுவரை அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். விசாரணையில் அவனது பெயர் இலியாஸ் என தெரியவந்தது. அவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து டிரம்ப் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
யூத எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த கொடூரமான கொலைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். வெறுப்புக்கும், பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த கொலை சம்பவத்தை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.