Spread the love

பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவமானப்படுத்தப்பட்டதாக ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக ஜாக்டோ – ஜியோ அறிவித்தது. இதையடுத்து, தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதன்படி அமைச்சர் டி.ஜெயக்குமாருடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந் நிலையில் இன்று 170 சங்கங்கள் பங்கேற்கும் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று நடந்தது. கூட்ட முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன்  கூறியதாவது:

“7 மணி நேரம் அமைச்சரிடம் கோரிக்கைகளைச் சொன்னோம். ஆனால் அமைச்சரின் பதில் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்தது. அவர் உங்கள் கோரிக்கையை முதல்வரிடம் கொண்டுசென்று ஆலோசனை செய்கிறேன் என்று சொல்லவில்லை. அவர் சொன்னது நீங்கள் சொன்னதை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன். அவ்வளவுதான். நீங்கள் எழுந்து போகலாம் என்று சொன்னார்.

இது 10 லட்சம் அரசு ஊழியர்களை, ஆசிரியர்களை அவமதிக்கும் அநாகரிக செயலாக நாங்கள் பார்க்கிறோம். எனவே திட்டமிட்டபடி டிச.4–ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர், அரசு ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும். என்றார்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி போராட்டத்தை கைவிடும்படி கேட்டு இன்று அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து முதல்வர் அழைத்து பேசினால் போராட்டம் நடத்துவது குறித்து பரிசீலிப்போம் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

LEAVE A REPLY