உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பாலமேட்டில் வருகிற ஜனவரி 16-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்காக பாலமேடு மஞ்ச மலை சுவாமி ஆற்று திடலில் வாடிவாசல், பிரம்மாண்டமான பார்வையாளர் மாடம் மற்றும் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்தப் போட்டியை தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார்.
ஜல்லிக்கட்டு வரலாற்றில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி வருகிற ஜனவரி 17-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோட்டைமுனி சாமி திடல் மற்றும் வாடிவாசல் பகுதிகளில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து கண்டுகளிக்கத் தனி மேடைகளும், பொதுமக்களுக்காக இரும்பு தடுப்பு மேடைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. அலங்காநல்லூர் போட்டியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
முக்கிய பிரமுகர்கள் வருகை தருவதாலும், லட்சக்கணக்கான ரசிகர்கள் திரளுவார்கள் என்பதாலும் மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவக் குழுக்கள், கால்நடை பராமரிப்புத் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் என அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

