அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நாயகணைப்பிரியாள் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத அருள்மிகு மார்க்க சகாயேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. சுந்தர சோழ மண்ணனால் கட்டப்பட்ட இக்கோவிலானது வரலாற்று சிறப்புமிக்க ஊராகத் திகழ்ந்து வருகிறது. சுந்தர சோழனுக்கு வழிகாட்டியதால் இக்கோவில்

சுவாமிக்கு வழித்துணை நாதர் என்ற பெயரும் உள்ளது. திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகவும் இக்கோவில் விளக்குகிறது. இப்படி பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் ஊர் மக்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஒன்றிணைந்து கும்பாபிஷேக விழாவை நடத்த தீர்மானம் செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கும்பாபிஷேக விழாவிற்கு தேதி குறிக்கப்பட்டு கடந்த 24 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று தொடங்கியது. கோவில் குடமுழக்கு சிவாச்சாரியார்கள் குழுவினர்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு, மங்கள வாத்தியம் மற்றும் வாண வேடிக்கையுடன் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திருப்பனந்தாள் காசிமடத்து 22 ஆவது அதிபர் ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் முன்னிலையில் கோவில் மூலவர் மற்றும் அம்பாள் பரிவார தெய்வ விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் நமசிவாய, சிவாய நம என்ற பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். பக்தர்களுக்கு ஏதுவாக ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் நாயகணைப்பிரியாள் மற்றும் தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

