பிரபல சமையல்கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல்துறை மற்றும் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஜாய் கிரிசில்டாவுக்கு தடை கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரச்னையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண, ஜாய் கிரிசில்டா தரப்பில் தன்னை அணுகியதாகவும், இந்த பிரச்னையை சட்டப்படி எதிர்கொள்வதாகவும், நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ளப் போவதில்லை எனவும் மாதம்பட்டி ரங்கராஜ், அக்டோபர் 15 ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஜாய் கிரிசில்டா தரப்பில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரங்கராஜுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில், தங்களது தரப்பில் அணுகியதாக பொய்யான, அவதூறாக குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளதாக நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மாதம்பட்டி ரங்கராஜ் 24 மணி நேரத்தில் திரும்ப பெற வேண்டும், அறிக்கைக்கு மன்னிப்பு கேட்பதோடு, தம்மை அணுகியவர்கள் யார் என்ற விவரங்களை ரங்கராஜ் வெளியிட வேன்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தவறினால், உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அந்த நோட்டீசில் ஜாய் கிரிசில்டா எச்சரிக்கை விடுத்துள்ளார்.