Skip to content

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது…

  • by Authour

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கார்வார் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான சதீஷ் கிருஷ்ண செயில் மீது, சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி தொடர்பாக 2010ல் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சதீஷ் செயில், 1.25 லட்சம் டன் இரும்புத்தாதுவை 2010 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ஏற்றுமதி செய்துள்ளார். அந்த இரும்புத்தாது, வனத்துறையால் பறிமுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகும். அதன் மொத்த மதிப்பு 86 லட்சம் கோடி ரூபாய்.

கடந்த 2024 அக்டோபர் மாதம் இவர் மீதான இரும்புத்தாது ஏற்றுமதி மோசடி வழக்கை விசாரித்த எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுக்கான சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஏழாண்டு சிறையும் அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் அவர் மீதான தண்டனையை கர்நாடகா உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இதற்கிடையே, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில், சதீஷ் செயில் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சதீஷ் கிருஷ்ண செயில் வீட்டில் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி சதீஷ் கிருஷ்ணாவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்த அமலாக்கத்துறையினர், ரூ.1.68 கோடி ரொக்கம், 6.75 கிலோ தங்கம் மற்றும் பல ஆவணங்களை பறிமுதல் செய்தது, அதே நேரத்தில் ரூ.14.13 கோடி மதிப்புள்ள வங்கிக் கணக்குகளையும் முடக்கியது.

இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக சதீஷ் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறையினர் அனுப்பிய சம்மனை ஏற்று, செவ்வாய்க்கிழமை பெங்களூரு அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜரானார். அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர் கைது செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒரு நாள் காவலில் எடுத்துள்ளனர்.

சமீபத்தில் மத்திய புலனாய்வு அமைப்புகளால் கைது செய்யப்பட்ட மூன்றாவது காங்கிரஸ் எம்.எல்.ஏ., இவர் ஆவார். ஏற்கனவே சித்ரதுர்கா எம்.எல்.ஏ., வீரேந்திரா, தார்வாட் ரூரல் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ண செயில் கைதாகியுள்ளார்.

error: Content is protected !!