கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து டிராக்டர் மற்றும் சுற்றுலா வாகனம் மீது மோதிய கோர விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எம். எல்.ஏ செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கரூர், செம்மடை அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த சொகுசு பேருந்து டிராக்டர் மீது மோதி சென்டர் மீடியனில் ஏறி இறங்கியதில் எதிரில் வந்த சுற்றுலா வாகனத்தில் (வேன்) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அதிகாலை 5 மணியளவில் நடந்த இந்த விபத்து குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பெயரில், கரூர் தீயணைப்பு நிலைய
மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாங்கல் போலீசார் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் 14 பேர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல், காவல் கண்காணிப்பாளர், கிருஷ்ணாபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

