கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் கரூர்- சின்னத்தாராபுரம் சாலையில் உள்ள சூடாமணி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவிலில் 27 ஆம் ஆண்டு பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், மதியம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,மாலை கொடியேற்றம் என நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மாசாணி அம்மன், மூலவருக்கு சிறப்பு அபிஷேக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன்
மகா தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆலய வாசலில் பக்தர்கள் சுமந்து வந்த கொடி கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதற்கு கங்கணம் கட்டப்பட்டு, வண்ண மாலைகள் சாத்தப்பட்டு, பட்டாடை உடுத்தப்பட்டு தொடர்ச்சியாக தூப தீபங்கள் காட்டப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆலய வாசலில் பெண் பக்தர் பரவசத்துடன் சாட்டையால் அடித்துக் கொண்டு நடனம் ஆடினார். மேலும் 12.02.2025 தேதி பூக்குழி குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.