கரூர் பண்டுதகாரன்புதூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவிகள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர்.
கேள்விகளுக்கு பதிலளித்து செந்தில்பாலாஜி பேசியதாவது: பெண்கள் அரசு அதிகாரிகளாகி மக்களுக்கு சேவை செய்வதுபோல, அரசியலிலும் ஈடுபட்டு பெண்களுக்கான உரிமைகள், சேவைகளை பெற வேண்டும். என் மீதான ஊழல் குற்றச்சாட்டில் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்தோம்.
அதன் பிறகு என் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. வேலைக்காக ரூ.1.5 லட்சம் இழந்ததாக சொல்லும் நபர்கள், ரூ.50 லட்சத்துக்கு வழக்கறிஞர்களை நியமித்து நீதிமன்றத்தில் வாதாட முடிகிறது என்றால், அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தெரிந்துகொள்ளலாம்.
அரசியல் களத்தில் மக்களை சந்தித்து வெற்றி பெற முடியாதவர்கள், தேர்தல் களத்தில் நான் நிற்கக்கூடாது என்பதற்காக இதுபோன்ற வழக்குகளை பதிந்து நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தர முயற்சிக்கிறார்கள்.நிச்சயமாக அவர்கள் கனவு நிறைவேறாது. என் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பதியப்பட்டது. நிச்சயமாக நீதி வெல்லும். எப்போதும் அரசியல் களத்தில் என்னுடைய ரோல் மாடல் உழைப் பின் ஓய்வறியாத தமிழக முதல்வர்தான். இவ்வாறு அவர் பேசினார்.