கரூர் துயர சம்பவம்: சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் சாலையை அளவிடு செய்யும் டிஜிட்டல் சர்வே கருவி மூலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூரில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூரில் உள்ள சுற்றுலா மாளிகை தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வேலுச்சாமிபுரம் பகுதி பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள், உயிரிழந்தவரின் குடும்பத்தினர்,

காவல்துறையினர், தவெக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தடயவியல் துறை அதிகாரிகளும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவ அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர், கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியான சம்பவ இடத்தில் உயர்ரக தொழில்நுட்ப கேமிராவுடன் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று தான்தோன்றி மலை சிபிஐ அலுவலகத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய வாகனம் கொண்டுவரப்பட்டு சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடவியல் துறை அதிகாரிகள் வாகனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தடயவியல் துறை அதிகாரி சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதிநவீன கேமரா உதவியுடன் ஆய்வு செய்த நிலையில் இன்று சிபிஐ அதிகாரிகள் வேலுச்சாமிபுரம் பகுதியில் சாலையை அளவிடு செய்யும் டிஜிட்டல் சர்வே கருவி மூலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

