Skip to content
Home » கரூரில் கூலிப்படை வைத்து தந்தையை கொலை செய்த மகன்..

கரூரில் கூலிப்படை வைத்து தந்தையை கொலை செய்த மகன்..

  • by Senthil

கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு சத்யா, சுகாசினி என்ற மகள்களும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். நல்லுசாமி பெயரில் 10 ஏக்கர் நிலமும், கொசுவலை கம்பெனியும் இருந்துள்ளது. தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் 2 மகள்களுக்கும், தலா 4 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்துள்ளார். மகன் சக்திவேலுக்கு 2 ஏக்கர் நிலம் மற்றும் கொசுவலை கம்பெனியை பார்த்துக்கொள்ள கூறியுள்ளார். சக்திவேல் முதல் மனைவியை விட்டுவிட்டு, இரண்டாவதாக கிருஷ்ணவேணி என்பவரை திருமணம் செய்து தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நல்லுசாமிக்கும், சக்திவேலுக்கு சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இரண்டு அக்காக்களை விட தனக்கு அப்பா நல்லுசாமி குறைவாக சொத்து பிரித்து கொடுத்த கோபத்தில், தனது நண்பன் மாரிச்செல்வம் (எ) வினித் என்பவரிடம் இது தொடர்பாக தெரிவித்துள்ளார். மாரிச்செல்வம் கொடுத்த யோசனையின் பேரில், சென்னையை சேர்ந்த தாவீத், வினோத் குமார், வசந்தகுமார், விக்ரம், ராஜேஷ் ஆகிய ஐந்து பேரை கரூர் வரவழைத்து கடந்த 01.07.2021-ல் நல்லுசாமி கொசுவலை கம்பெனியில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, சிசிடிவி கேமராக்களை ஆப் செய்து விட்டு கை கால்களை பிடித்து, தலையணை வைத்து கொலை செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து தலைமறைவாகிய நிலையில், மகன் சக்திவேல் மீண்டும் மோடி நாயக்கனூர் சென்று விட்டார். அடுத்த நாள் காலை கொசுவலை கம்பெனியில் அப்பா தூங்கிய நிலையில், இறந்து விட்டார் என்ற தகவலை மகள்கள் இருவரும், மகன் சக்திவேலுக்கு தெரிவித்து, கரூர் வரவழைத்து இறுதிச்சடங்கை முடித்து விட்டனர்.

இந்த நிலையில் கொலை செய்ய வரவழைக்கப்பட்ட கூலிப்படையைச் சேர்ந்த நபர்கள் ஐந்து பேருக்கும் சக்திவேல், ஐந்து லட்சம் ரூபாய் கொடுப்பதாக பேசி இருந்த நிலையில், 1 ஒன்றரை லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். மீதி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், ஐந்து பேரும் பொது இடத்தில் கொலை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.

இந்த உண்மை உளவுத்துறை மூலமாக டிஜிபி அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு, ஐ.ஜி கார்த்திகேயன் மூலமாக திருச்சி சரக டிஐஜி மனோகரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கரூர் எஸ்.பி பிரபாகர் உத்தரவின் பேரில் பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் சென்னை, கோயம்பேடு பகுதியில் இருந்த மாரிச்செல்வம் (எ) வினித், தாவீத், வினோத்குமார், விக்ரம், ராஜேஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்து கரூர் அழைத்து வந்தனர். மேலும், நல்லுசாமியின் மகன் சக்திவேலை போடிநாயக்கனூர் சென்று கைது செய்து அழைத்து வந்தனர்.

தொடர்ந்து பசுபதிபாளையம் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் ஆறு பேரையும், கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு முன்பு ஆஜர் படுத்தி, நீதிமன்ற காவலுக்கு திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். சொத்து பிரச்சனைக்காக சொந்த அப்பாவை கூலிப்படை வைத்து கொலை செய்த மகன் உள்ளிட்ட ஆறு பேர் 3 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்ட சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!