கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் கரூர் வந்து நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதாக இருந்த நிலையில், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு முடிவு மாற்றப்பட்டது.
இந்நிலையில் நாளை சென்னை, மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார். இதற்காக கட்சி நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்ல 5 ஆம்னி பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இன்று காலை கட்சி நிர்வாகிகள் வாகனங்கள் மூலம் அவரவர் வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட குடும்பத்தினர் கரூரில் பிரசித்தி பெற்ற வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னை புறப்பட்டனர்.
உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்ட பின்னர், ஓட்டுநர் பேருந்தின் சக்கரங்களுக்கு எலுமிச்சை கனி வைத்து, சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்ட பின் வாகனத்தை எடுத்துச் சென்றார். என் கரூர் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் 25-க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினர் அழைத்துச் செல்லப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் உடன் சென்றுள்ளன.
மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேரின் குடும்பத்தினர் அந்தந்த பகுதிகளில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் அதேபோல் மீதமுள்ள நபர்கள் இன்று மாலை அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கட்சி நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை அழைத்துச் செல்லப்படும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் சென்னை, மாமல்லபுரம் பகுதியில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.

