கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இனாம் நிலப் பிரச்சனை – பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருக்கக்கூடிய நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானது என சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் அறநிலையத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் மற்றும் வெண்ணமலை பொதுமக்கள் சார்பில் உரிமம் பெற்ற இனாம் நிலத்தில் குடியிருக்கும் மக்களை வெளியேற்றும் இந்து சமய அறநிலைய துறையை கண்டித்தும், மாவட்டம் முழுவதும் கோவில் நிலங்களில் குடியிருக்கும் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அனுபவ ரீதியான பட்டா வழங்க சட்டமன்றத்தில் உரிய சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

