கரூரில் கணவனை பிரிந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, வீட்டுக்கு தெரியாமல் கணவன், மனைவி போல வாழ்ந்து விட்டு ஏமாற்றிய நபர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இளம்பெண் கண்ணீர் மல்க பேட்டி.
கரூர், அண்ணா நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி (27). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சண்முகநாதன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் நடந்து ஒரு வருடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். அதன் பிறகு தாந்தோணிமலை, வ.உ.சி நகரைச் சேர்ந்த உறவுக்கார இளைஞரான கதிரேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன், மனைவி போல ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர. இதன் மூலம் பரமேஸ்வரி கர்ப்பமடைந்துள்ளார். தங்களது பழக்கம் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென கேட்டுள்ளார். அதற்கு முன் கர்ப்பத்தை கலைத்து விட வேண்டும் எனவும், பரமேஸ்வரிக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக வீட்டில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், கதிரேசனுக்கு அடிக்கடி பண உதவியும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கதிரேசன் வீட்டில் பார்த்த வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்து கொண்டு, தன்னை ஏமாற்றி வருகிறார் என்ற தகவலால் இவர்களது பழக்கம் குறித்து கதிரேசன் வீட்டார் மற்றும் சம்பந்தப்பட்ட பெண் வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், பரமேஸ்வரி கூறுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், கதிரேசனின் அப்பா கணேசன் தன்னை அருவருக்கத்தக்க வகையில், ஆபாச பேச்சுக்கள் பேசியதாக கூறுகிறார்.
இதையடுத்து கரூர் மகளிர் காவல் நிலையத்தில் கதிரேசன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், மாவட்ட எஸ்.பி மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பரமேஸ்வரி புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கதிரேசன் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து விசாரித்த மகளிர் காவல் நிலைய போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும், பரமேஸ்வரி கொடுத்த 2 லட்சத்துடன் சேர்த்து, மேலும் 1 லட்சம் பணம் கொடுத்து பிரச்சனையை முடித்துக் கொள்ளுமாறு போலீசார் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதை ஏற்றுக் கொள்ளாத பரமேஸ்வரி சமூக நலத்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் கதிரேசனை கைது செய்த போலீசார் தகாத வார்த்தையால் திட்டுதல், ஏமாற்றுதல், கட்டாய கருக்கலைப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு கதிரேசன் தரப்பில் அளித்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவரை பிணையில் விடுவித்துள்ளார்.
மேலும் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் என்னை வீட்டில் விட்டுவிட்டு 30 ஆயிரம் ரூபாய் அப்ப பணம் கொடுத்தால் உங்களுக்கு சாதகமாக பேசுகிறேன் என கூறியுள்ளார் அதனை நம்பி அவர் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த பரமேஸ்வரி, தான் கொடுத்த புகாரை பெற்று உரிய நடவடிக்கை எடுக்காமல், பெயரளவில் கதிரேசன் மீது வழக்கு பதிவு செய்ததாகவும், மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் முத்துராணி என்பவர் தன்னிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு தனக்கு சாதகமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தனக்கு நடந்த அநீதிக்கு கதிரேசன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் விளக்கம் கேட்டபோது பரமேஸ்வரி அளித்த புகாரை பெற்று கதிரேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கை மீது திருப்தி இல்லை என்றால், மேல் நடவடிக்கை கோரி பரமேஸ்வரி மனு கொடுத்தால் அந்த மனுவை மீண்டும் விசாரிப்பதாக தெரிவித்தார்.