டில்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை தொடர்பான முறைகேடு புகாரில் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தன. இது தொடர்பான சட்டப் போராட்டம் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய முகாந்திரம் மற்றும் ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருந்து கெஜ்ரிவால் சிசோடியா உட்பட 23 பேரை விடுவித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ‘நீதிமன்றத்தின் இந்த முடிவு சட்ட ரீதியான மிகப்பெரிய நிவாரணம் ஆகும். ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு தேவையான ஆரம்பகட்ட ஆதாரங்கள் கூட இல்லாத நிலையில், அது விசாரணைக்கு முன்பே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு இந்த தீர்ப்பு மூலம் நீதி கிடைத்துள்ளது. அடிப்படை குற்றச்சாட்டுகளை கொண்ட சிபிஐ வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அதன் அடிப்படையில் தொடரப்பட்ட அமலாக்கத்துறையின் பணமோசடி வழக்கும் இப்போது முழுமையாக செயலிழந்துவிட்டது’ என்று தெரிவித்தார்.

