கோவை பீளமேட்டை சேர்ந்தவர் கமலேஸ்வரன் (55). ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு கேரள மாநிலம் முத்துலமாட போஸ்ட் கம்பரத்து சாலா பகுதியை சேர்ந்த சினேகம் சாரிட்டபுள் டிரஸ்ட் நடத்தி வரும் சுனில் தாஸ் (63) என்ற சாமியார் அறிமுகமாகி உள்ளார்.
அந்த சாமியார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கமலேஸ்வரனிடம் தனது சாரிட்டபுள் டிரஸ்ட்டுக்கு ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.17 ஆயிரம் கோடி வந்திருப்பதாகவும், ரூ.3 கோடி கடன் கொடுத்தால் அதனை வாங்கி பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ரிசர்வ் வங்கியில் இருந்து வந்ததாக போலியாக தயார் செய்த ஒரு கடிதத்தை காட்டி உள்ளார். இதனை பார்த்து உண்மை என நினைத்து உதவி செய்ய முன்வந்த கமலேஸ்வரன் ரூ.1 கோடியே 56 லட்சத்து 85 ஆயிரத்தை வங்கி மூலமும், ரூ. 1 கோடியே 43 லட்சத்து 15 ஆயிரத்தை ரொக்கமாகவும் கொடுத்துள்ளார். அதன்பின், பல மாதங்களாகியும் சுனில் தாஸ் பணத்தை திருப்பி தரவில்லை.
இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவில் கமலேஸ்வரன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் சுனில் தாஸ் மோசடி பேர்வழி என்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுரையில் பதுங்கி இருந்த சுனில் தாசை போலீசார் கைது செய்து, கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.