கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனிடையே, வயநாடு நிலச்சரிவு நிவாரணமாக 2 ஆயிரத்து 221 கோடி ரூபாய் ஒதுக்கும்படி மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், நிவாரணமாக 260 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. ஆனால் அந்த நிதி இதுவரை கேரளாவுக்கு வழங்கப்படவில்லை.
அதேபோல், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுத்து வருகிறது. வங்கிக்கடன் தொடர்பான வழக்கு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதி 2 ஆயிரத்து 221 கோடி ரூபாயை முழுமையாக உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்தார். மேலும், கோழிக்கோடு கினலூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும், கடன் பெறுவதில் கேரள அரசுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முன்னதாக நேற்று பினராயி விஜயன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
