நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 2022 லிருந்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டுமே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரிடம் நேரடியாக அழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மற்றும் பல்வேறு சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது.
அந்த வகையில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 11-ம் தேதி வீரபெருமாள் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது.
அப்போதைய பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த கனகராஜ், இறுதியாக விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாகவும், அவர் தனது சொல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்தும் உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.