பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லை பகுதிகளில்
கட்டுப்பாடு அறையுடன் கூடிய 236 கண்காணிப்பு காமிராக்கள்
காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்
கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்பில் கட்டுப்பாடு அறையுடன் கூடிய 236 கண்காணிப்பு காமிராக்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது வரவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கு அனைத்து ஏற்பாடுகளுடன் கவால்துறை தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டத்திற்கு உடப்ட்ட பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் நரசிம்மநாயக்கன்பாளையம், இடிகரை, கேஸ் கம்பெனி, பெரியநாயக்கன்பாளையம் டவுன் பகுதி, திருமலைநாயக்கன்பாளையம், சாமிசெட்டிப்பாளையம், கூகவுண்டம்பாளையம், கோவனூர், பாலமலை, நொச்சிபாளையம், சாமநாயக்கன்பாளையம், மத்தம்பாளையம், ஒன்னிப்பாளையம், காளிப்பாளையம், தொட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 236 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, அனைத்தும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இக்கண்காணிப்பு காமிராக்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திறந்து வைத்து சிசிடிவி காமிரா பொருத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும் இந்த கண்காணிப்பு காமிராக்களை பொருத்த பங்களிப்பு செய்த நபர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது வரவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கு அனைத்து ஏற்பாடுகளுடன் கவால்துறை தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கோவை – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குமாரபுரம் முதல் பெட்டதாபுரம் வரையுள்ள அனைத்து சந்திப்புகளிலும் போக்குவரத்து மற்றும் குற்றச் செயல்களை கண்காணிக்கும் பொருட்டு 60 கேமராக்கள் மற்றும் வாகன எண்களை தெளிவாக பதிவு செய்யும் 6 ANPR கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4 கேமராக்கள் வீரபாண்டியிலும், 2 கேமராக்கள் நரசிம்மநாயக்கன்பாளையத்திலும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் மண் திருட்டை கண்காணிக்கும் பொருட்டு 20 கேமராக்கள் அரசாங்கத்தால் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் காவல்துறை பொதுமக்களிடம் CCTV கேமராக்கள் பொருத்துவதால் சந்தேக நபர்களை கண்காணிக்கவும் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் சுமார் 1,500 கேமராக்களை பொதுமக்கள் தங்களது வீடுகளில் பொருத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல்கண்காணிப்பாளர் பொன்னுசாமி அனைவரையும் வரவேற்றார். பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

