Skip to content
Home » கோவை வியாபாரி வீட்டில் 50 பவுன், ரூ.13 லட்சம் கொள்ளை…. பட்டப்பகலில் முகமூடிகள் அட்டகாசம்

கோவை வியாபாரி வீட்டில் 50 பவுன், ரூ.13 லட்சம் கொள்ளை…. பட்டப்பகலில் முகமூடிகள் அட்டகாசம்

  • by Senthil

கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு ஆரோக்கியசாமி வீதியை சேர்ந்தவர் கமலேஷ் மோடி (வயது 50). பருத்தி வியாபாரி. இவர் ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருத்தி வாங்கி கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரூபல்(45). இவர்களின் மகன் மிகிர்(22).

மிகிர்தந்தையின் வியாபாரத்திற்கு துணையாக இருந்து வருகிறார். நேற்று தைப்பூசம் என்பதால் மருதமலை கோவிலில் பக்தர்களுக்கு பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்களை கொடுப்பதற்காக கமலேஷ் மோடி சென்றுவிட்டார்.  வீட்டில்  ரூபல், மகன் மிகிர் மற்றும் வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் இருந்துள்ளனர்.  மதியம் 12.30 மணி அளவில் கமேலஷ்மோடி வீட்டுக்கு 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிளில் மொத்தம் 12 பேர் முகமூடி அணிந்தபடி வந்தனர். அவர்கள் அந்த பங்களா வீட்டுக்குள் திபுதிபு என்று புகுந்தனர்.

வீட்டின் கீழ்தளத்தில்பருத்தி அலுவலக அறை உள்ளது. அங்கு மகன் மிகிர் மற்றும் 3 ஊழியர்கள் இருந்தனர். கொள்ளையர்கள் 5 பேர் கீழே நின்று கொண்டனர். 5 பேர் பங்களா வீட்டின் மாடிக்கு சென்றனர். இதை பார்த்து மிகிர் அதிர்ச்சி அடைந்தார். அவர் சுதாரிப்பதற்குள் கீழ் தளத்துக்கு சென்ற 5 பேரும் திடீரென்று கத்தியை எடுத்து மிரட்டி மிகிர் உள்பட 4 பேரையும் கயிறு மற்றும் திரைச்சீலையை கிழித்து கட்டிப் போட்டனர். பின்னர் பருத்தி அலுவலகத்தில் இருந்த ரூ. 13 லட்சத்தை கொள்ளை அடித்தனர்.  இதற்கிடையே மாடிக்கு சென்ற கொள்ளையர்கள் பருத்தி வியாபாரி கமலேஷ் மோடியின் மனைவி ரூபலின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்கள். மேலும் அந்த வீட்டில் இருந்த வேலைக்காரர்கள் உள்பட 4 பேரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திரைச்சீலையை கிழித்து கட்டிப் போட்டனர்.

அவர்கள் கூச்சல் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்து வைத்தனர். இதையடுத்து கொள்ளையர்கள் வீட்டு பீரோவின் சாவியை தருமாறு கேட்டு ரூபலை மிரட்டினர். இதனால் பயந்து போன ரூபல் பீரோ சாவியை கொடுத்தார். உடனே பீரோவில் இருந்த தங்க, வைர நகைகள் உள்பட 50 பவுன் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். அதோடு வீட்டில் இருந்தவர்கள் வைத்து இருந்த செல்போன்களை பறித்து விட்டு கார்களில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். கொள்ளையர்கள் சென்றதும் கை, கால்களை கட்டி இருந்த கயிறுகளை அவிழ்த்து விட்டு மிகிர், ரூபல் மற்றும் ஊழியர்கள் வெளியே வந்தனர். அவர்கள் கொள்ளை நடந்தது குறித்து கூச்சல் போட்டனர்.

பங்களா வீட்டில் கொள்ளை நடந்தது குறித்து தகவல் அறிந்ததும் மதியம் 1 மணி அளவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பங்களாவில் கொள்ளையடித்த ஆசாமிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளை நடந்த பங்களா வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை. இதனால் கொள்ளையர்களை உடனடியாக கண்டறிவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது.

போலீஸ் மோப்பநாய் அங்கு கொண்டு வரப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர். கமலேஷ் மோடி வீட்டில் இல்லாததை அறிந்து திட்டமிட்டு கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக தெரிகிறது. கத்தியை காட்டி மிரட்டியதால் உயிருக்கு பயந்து கொள்ளையர்களிடம் நகை பணத்தை எடுத்து கொடுத்ததாகவும், கொள்ளையர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசியதாகவும், அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக முகமூடி அணிந்து வந்ததாகவும் தெரிகிறது. கோவையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்து போலீசாருக்கு சவால் விடும் வகையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!