உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய். இவர் மீது சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் இன்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் செருப்பை வீசி தாக்குதல் நடந்த முயற்சித்தார்.விஷ்ணு சிலை புதுப்பிப்பு குறித்த வழக்கை விசாரித்தபோது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ராகேஷ், தலைமை நீதிபதி மீது செருப்பை வீசி தாக்க முயற்சித்தார். சனாதனத்தை அவமதிப்பதா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நோக்கி வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூச்சலிட்டார். உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், தாக்குதல் நடத்த முற்பட்ட ராகேஷ் கிஷோரை தடுத்து நிறுத்தி அவரை வெளியேற்றினர். அதேவேளை, இதுபோன்ற சம்பவங்கள் என்னை பாதிக்காது என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுவதாக இந்தியா பார் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.
