நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த அய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரையன். இவருடைய 5 வது மகள் ஷாலினி ஆலத்தம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்துவந்தார். ஷாலினியும், அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவரும் காதலித்துவந்ததாக தெரிகிறது. இது ஷாலினியின் வீட்டுக்கு தெரியவரவே, ஷாலினியின் அக்கா நந்தினி ஷாலினி மற்றும் சின்னதுரையை கண்டித்ததாக கூறப்படுகிறது. தங்கையுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று கூறியதால் சின்னதுரைக்கும், நந்தினிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே சின்னதுரை நந்தினியை தகாத வார்த்தையால் திட்டி உறவினரோடு சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நந்தினி திருக்குவளை காவல்நிலையத்தில் கடந்த 22ம் தேதிபுகார் அளித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த 26-ம் தேதி மாலை 6 மணி முதல் ஷாலினியை காணவில்லை என பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் அன்று நள்ளிரவு வீரையன் வீட்டிற்கு பின்புறம் சிறுநீர்கழிக்க சென்றபோது ஷாலினி மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியோடு ஷாலினியின் உடலை மீட்ட வீரையன், இதுகுறித்து திருக்குவளை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். உடனே போலீசார் ஷாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பரிசோதனையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததை அடுத்து ஷாலினியின் அக்கா நந்தினி அளித்த புகாரின்பேரில் மாணவியை காதலித்து வந்த சின்னதுரை, அவரது சகோதரர் கண்ணன், தந்தை ராஜேந்திரன், தாய் பாப்பாய் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்