சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 2ம் தேதி காலை மதுரையிலிருந்து சென்னைக்கு மதுரை ஆதீனம் மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள்,
காரில் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேலம் பிரிவு ரவுண்டானா பகுதியில் வேகமாக வந்தபோது, மற்றொரு காருடன் மதுரை ஆதீனத்தின் கார் மோதியது.
இதில் மதுரை ஆதீனத்தின் கார் லேசான சேதம் அடைந்தது. ஆதீனத்திற்கு காயம் ஏதுமில்லை. பின்னர் மதுரை ஆதீனம் சென்னை புறப்பட்டு சென்றதால் காவல் நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை. எனினும் விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சென்னையில் ஆதீனம் கலந்து கொண்ட ஒரு விழாவில், மதுரை ஆதீனம் பேசும்போது, ‘நல்லது சொன்னால் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். தன்னை உளுந்தூர்பேட்டை அருகே கொல்ல முயற்சி நடைபெற்றது. இதற்கு பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதிகள் தொடர்பு உள்ளது பேரிகார்டை உடைத்துக்கொண்டு வந்தனர். விபத்துக்குப் பிறகு நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதில் நான் மயக்கமடைந்துவிட்டேன். ஆனால் என் கார் டிரைவர், தொப்பி அணிந்து தாடி வைத்த ஒருநபர் காரில் நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டி வந்து மோதியதாக தெரிவித்தார்.
என்று கூறினார். ஆதீனத்தின் இந்த பேச்சு தமிழ்நாடு முழுவதும் வைரலாகி பரபரப்பானது.ஆதீனத்தின் டிரைவரும் டிவிக்களுக்கு அளித்த பேட்டியில், நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்து மோதினார்கள். கொலை முயற்சி என கூறினார்.
ஆனால் ஆதீனத்தின் கார் தான் தவறுதலாகவும், அதிவேகமாக வந்து விபத்துக்கு காரணமாக இருந்து உள்ளது. இந்த விபத்து ஏற்பட்டதும் இரு கார் டிரைவர்களும் இறங்கி பேச்சுவார்த்தை நடத்தி வாக்குவாதம் நடத்தி விட்டு பின்னர் போய் விட்டனர். ஆனால் ஆதீனமும், அவரது டிரைவரும் கொலை முயற்சி என்ற தொனியில் பேட்டி அளித்து தமிழ்நாட்டில் ஒரு மத மோதலை ஏற்படுத்தும் தொனியில் நடந்து கொண்டனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதீனம் சென்ற கார் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அதில், மதுரையில் இருந்து சென்னை செல்லும் மதுரை ஆதீனத்தின் கார், உளுந்தூர்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள மேம்பாலத்தின் வழியாக செல்லாமல் மாற்று சாலையில் சென்று உளுந்தூர்பேட்டை நோக்கி செல்கிறார்.

அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி மெதுவாக சென்ற கார் மீது மதுரை ஆதீனத்தின் கார் மின்னல் வேகத்தில் மோதியுள்ளது. தவறான பாதையில் மின்னல் வேகத்தில் மதுரை ஆதீனம் கார் சென்றதால் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் மதுரை ஆதீனத்துடன் வந்தவர்களும் சேலத்தில் இருந்து காரில் வந்தவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி காவல் நிலையத்தில் எந்த புகாரும் அளிக்காமல் புறப்பட்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. ஆனால், தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக தவறான தகவலை மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மத மோதலை உருவாக்கும் நோக்கில் மதுரை ஆதீனம் கூறிய கருத்துக்கள் குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும். அவரை இப்படி சொல்ல தூண்டி விட்டது யார், தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க மதுரை ஆதீனம் திட்டமிட்டாரா அல்லது அவரை யாரும் தூண்டி விட்டார்களா என விசாரிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதீனத்தின் இந்த செயல் தான் இப்போது தமிழகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. பொய் சொன்ன ஆதீனத்தின் டிரைவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை இப்படி பேச சொன்னது யார் என்பது குறித்தும் அவரிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.