Skip to content

மதுரை ஜல்லிக்கட்டு: காளைகள், வீரர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் ஜனவரி 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் 17-ந்தேதியும் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (ஜனவரி 7) மாலை 5 மணிக்குத் தொடங்கியது.

போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் காளை உரிமையாளர்கள் மற்றும் வீரர்கள், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான madurai.nic.in வாயிலாகத் தங்களது பெயர்களைப் பதிவு செய்யலாம். இந்தப் பதிவு நாளை (ஜனவரி 8) மாலை 5 மணி வரை மட்டுமே நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் பிரவீண்குமார் அறிவித்துள்ளார்.

நிபந்தனைகளின்படி, ஒரு காளை இந்த மூன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும். காளையுடன் அதன் உரிமையாளர் மற்றும் நன்கு பழக்கமான உதவியாளர் என இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களின் சான்றுகள் முழுமையாகச் சரிபார்க்கப்பட்ட பின்னரே, தகுதியானவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்தவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு களத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!