திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவை வைகோ ஆரம்பித்த காலம் முதல் அவருடன் பயணிப்பவர் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன். வைகோவுடன் சேர்ந்து பொடா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரை தெற்கு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. பூமிநாதனும் இந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏ ஆனார்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பூமிநாதன் எம்எல்ஏ, கலந்து கொண்டு பேசினார். அவர்.. எம்எல்ஏ ஆகி 2 ஆண்டுகளாகிவிட்டது. மக்களுக்கு சேவை செய்யவே இந்தப் பதவிக்கு வந்தேன். மாநகராட்சிக் கூட்டங்களில் தொடர்ந்து பேசி வருகிறேன். நேரிலும் சந்தித்து அதிகாரிகளிடம் முறையிடுகிறேன். ஆனால், தொகுதி மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை கூட செய்து கொடுக்க முடியவில்ல. தினமும் பல ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் செல்லும் தெப்பக்குளம் சாலையை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் கூறிவிட்டேன். இதுவரை சீரமைக்கவில்லை.
குடிநீரில் கழிவு நீர் கலக்கிறது. பாதாள சாக்கடைப் பணிக்காகவும், பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காகவும் தோண்டிய சாலைகளை இதுவரை புதிதாக போட்டுக் கொடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகளையும் குறை சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனெ்றால் ஊழியர்களில் ஆரம்பித்து அதிகாரிகள் வரை மாநகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை. மக்களையும் திருப்திப்படுத்த முடியவில்லை. தொகுதிக்குள் சென்றாலே மக்கள் காரை சூழ்ந்துவிடுகிறார்கள்.
மக்களுக்கு உதவாத பதவியை பெருமைக்கு வைத்து என்ன பயன்? அதனால், நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யலாம் என முடிவெடுத்துள்ளேன். ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுக்கப் போகிறேன். இதை எங்கள் தலைவர் வைகோவிடம் சொல்ல போகிறேன்’’ என்றார்.
எம்எல்ஏவின் இந்த விரக்தி பேச்சைக் கேட்ட மேயர் இந்திராணி, ‘‘அண்ணா, உங்கள் வருத்தம் எங்களுக்கு புரிகிறது. உடனடியாக உங்கள் தொகுதி வார்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்க்க சொல்கிறேன்’’ என்றார். இவர் பேசுவதற்கு முன் துணை மேயர் நாகராஜனும், ‘‘நான் பொறுப்பேற்று இதுவரை என்னுடைய வார்டில் ஒரு பணியும் நடக்கவில்லை. துணை மேயராக இருந்து என்ன பயன்?’’ என்றார்.