Skip to content

மதுரையில் கொள்ளைபோனது ரூ.42 லட்சம் தானா? மாஜி அமைச்சரின் டிரைவர் கைது

மதுரையைச் சேர்ந்த  முன்னாள்  அதிமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீடு மற்றும் அபார்ட்மெண்ட் வீட்டில்  ரூ.15 கோடி  கொள்ளை போனதாக  சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.யார் அந்த அமைச்சர், அவருக்கு அந்த பணம் எப்படி வந்தது,  வருமானவரித்துறை, அமலாக்கத்துறை இது குறித்து விசாரித்ததா என மதுரை மக்கள் பலவித கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், மதுரை விளாங்குடி, மீனாட்சி நகர் அபார்ட்மென்ட்டில் வசிக்கும்  ஒருவர்,  தனது வீட்டில்  ரூ.42 லட்சம் கொள்ளை போனதாக செல்லூர்  போலீசில் புகார் அளித்திருந்தார்.

சென்னையில் உள்ள  ஒரு  ஐடி நிறுவனத்தில்  அவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

அவரது  சொந்த  ஊரான போடியில் கோயில் திருவிழாவிற்காக கடந்த ஜூன் 17ம் தேதி குடும்பத்துடன் சென்றுவிட்டார். 21ம் தேதி வீடு திரும்பியபோது வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.  சொத்துகளை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.42 லட்சம் பணத்தை வீட்டில்  வைத்திருந்தாராம்.  பணம் இருந்த  பேக் மாயமாகி விட்டது. வீட்டினுள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை’’ என  போலீசில் புகார் செய்திருந்தார்.

.இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சிவப்பு பிரகாஷ் (35), நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த விவேக் ஆனந்த் (34), பொதும்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (49) மற்றும் திருப்பாலையைச் சேர்ந்த யோகேஷ் (36) ஆகியோரை  போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இவர்களில் சுரேஷ், முன்னாள் அதிமுக அமைச்சர்  ஒருவரிடம்  ஏற்கனவே டிரைவராக வேலை செய்தவராம்.  இவர்கள் காரில் வந்து பல பைகளை காரில் ஏற்றிக்கொண்டு சென்று உள்ளனர்.

அந்த வகையில் அவருக்கு  முன்னாள் அமைச்சரின் பணம்  எங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. தேர்தலுக்காக  அவை  பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிந்து உள்ளது. அவர் கொடுத்த  தகவலின்பேரில் கூட்டாக சேர்ந்து இந்த கொள்ளையை நடத்தி உள்ளனர்.

இந்த கொள்ளை வழக்கில்  பாலசுப்பிரமணியன், சசி,  ராஜா, நாகார்ஜூன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் தான்  பெரும் தொகையுடன் தலைமறைவாகி விட்டதாகவும்  கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து அமலாக்கத்துறையும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது

கொள்ளை போன பணம் ரூ.15கோடி அளவுக்கு இருக்கும் என்றும் மதுரை வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்படுகிறது. முதலில்  போலீசில் புகார் கொடுக்காமலேயே  குற்றவாளிகளை பிடிக்க  போலீசாரின் உதவியை நாடி உள்ளனர். போலீசார் மறுத்து விட்டதால்  சில லட்சங்களை  மட்டும் கணக்கு காட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டு இப்போது  4 பேரை கைது செய்யதுள்ளனர் என்கிறார்கள்.

உள்ளபடியே கொள்ளை போன பணம் முழுவதையும் வைகை அணையில்  அடுக்கினால் தண்ணீர் ஆவியாகாமல் தடுத்து விடலாம். அந்த அளவுக்கு  பணம் கொள்ளை போய் இருக்கிறது என மதுரை மக்கள் பரபரப்புடன் பேசிக்கொள்கிறார்கள்.

 

 

error: Content is protected !!