மதுரை அடுத்த பாரபத்தி என்ற இடத்தில் தவெகவின் 2வது மாநாடு இன்று நடக்கிறது. இதற்காக காலையில் இருந்தே தொண்டர்கள் திரண்டனர். முன்னதாக வந்து இடம் பிடித்தால் விஜயை பார்க்கலாம் என தொண்டர்கள் ஆர்வத்துடன் வந்து குவிந்தனர். அதே நேரத்தில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இன்று வெயில் சுட்டெரித்தது. வெயிலின் தாக்கத்தை குறைக்க டிரோன்கள் மூலம் மைதானத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஆனாலும் வெப்பம் அதிகமாகவே இருந்தது.
மாநாடு சார்பில் தண்ணீர் பாட்டில் ,பிஸ்கட் பொட்டலங்கள் வழங்கப்பட்டது ஆனாலும் பெரும்பாலானகர்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். காலை 10 மணிக்கு பிறகு வெயிலின் தாக்குதல் தாங்க முடியாமல் தொண்டர்கள் மயக்கமடைய தொடங்கினர். மைதானம் வெட்ட வெளியாக அமைக்கப்பட்டிருந்தது. அங்கு நிழலுக்கு ஒதுங்க கூட இடம் இல்லை. எனவே நேரம் செல்ல செல்ல தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். மதியம் 2.30 மணி அளவில் 270க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்தனர்.
அவர்களுக்கு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டது. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட 50 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். 3மணிக்கு மேல் மாநாடு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2.45 மணிக்கு பொதுச்செயலாளர் ஆனந்த் மேடைக்கு வந்தார். எனவே சற்று நேரத்தில் மாநாடு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.