ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி
அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் காவல் நிலையம், காவலர் குடியிருப்பு இயங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடத்திற்கு காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு மாற்றப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. இதனால் பழைய கட்டிடம் பயன்பாடின்றி சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. தற்போது அப்பகுதியில் மீன் கடைகள், காய்கறி கடைகள் இயங்கி வருகிறது. மீன் கழிவுகள் கோழி கழிவுகள் கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. பாழைந்த கட்டிடத்திற்குள் மது அருந்துவதும், கஞ்சா புகைப்பதும் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு குடியிருப்பு உள்ளே ஒருவர் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆர்டிஓ நேரில் ஆய்வு செய்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டும் ஆபத்தான அந்த கட்டிடத்தை இதுவரை இடிக்கவில்லை.
இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சேகு நெய்னா கூறியதாவது:-
பல ஆண்டுகளாக எவ்வித பயன்பாடும் இல்லை. இதனை இடித்து விட்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம். பயன்பாடு இல்லாமல் இருப்பதால் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. துர்நாற்றம் வீசி சிரமத்தை ஏற்படுத்தும் இந்த ஆபத்தான கட்டிடங்களை இடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

